இந்த சத்து பானத்துக்கான தூளை நாம் வீட்டிலேயே தயாரிக்கலாம். பூசணிக்காய் உடலுக்கு மிகவும் குளிர்ச்சி தரக்கூடியது. வட இந்தியாவில் பூசணி அல்வா மிகவும் பிரபலம். கண் எரிச்சல், அதிக சூட்டால் சோர்வு போன்ற பிரச்சனைகள் இருக்கும் பிள்ளைகளுக்கு இந்த ட்ரிங்க், சூட்டைக் குறைத்து, சக்தியை தரும். பூசணி விதைகள் நாட்டு மருந்து கடையில் கிடைக்கும். அதை வாங்கி உடைத்து பருப்பாக்கிக் கொள்ள வேண்டும். தூள் அரைக்க தேவையானவை: பூசணிவிதை பருப்பு -அரை கப், பாதாம் பருப்பு- அரை கப், பிஸ்தா பருப்பு- கால் கப், கேழ்வரகு- கால் கப். பிஸ்தா சேர்த்தால் வித்தியாசமான மணம் வரும். அந்த வாசனை பிடிக்காதவர்கள், வெறும் பூசணி விதை மற்றும் பாதாம் பருப்பு மட்டும் சேர்த்துச் செய்யலாம்.
செய்முறை: மேலே சொன்ன எல்லாவற்றையும் லேசாக வறுத்துக் கொள்ள வேண்டும். பூசணி விதையை வறுக்கும்போது அதன் குணம் இன்னும் மேம்படும். அடுப்பை 'ஸிம்'மில் வைத்து லேசாக வாசம் வரும் வரை வறுத்தால் போதும். சூடு ஆறியதும் வறுத்தப் பொருட்களை மாவாக அரைத்துக் கொள்ளவும். இந்த தூளை, சூடான பாலில் ஒரு டீஸ்பூன் அளவில் கலந்து இரவில் கொடுக்கலாம்.
பலன்கள்
*பூசணி விதை சாப்பிடுவதால், பொட்டாசியம், மாங்கனீஸ் போன்ற தாதுச் சத்துக்கள் உடலில் சேரும்.
* நரம்புகளை பலப்படுத்தும். மூளையின் ஞாபகம் வைத்துக் கொள்ளும் திறன் அதிகரிக்கும்.
* படிக்கும் பிள்ளைகளுக்கு தேர்வு சமயங்களில் இந்த சத்து பானம் கொடுத்தால், படித்ததை மறக்காமல் நினைவில் வைத்துக்கொள்ளும் அளவுக்கு ஞாபக சக்தி கிடைக்கும்.
* ஒல்லியாக இருக்கும் பிள்ளைகளுக்கு உடலில் எடையும் கூடும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக