இந்த உலகில் ஆச்சரியமும், அதிசயமும் எது என்று கேட்டால் இயற்கை என்பார்கள். இயற்கை என்பது மிகப் பெரியவரம். இயற்கையின் தனித்தன்மைகள் ஏராளம், ஏராளம். இயற்கையோடு இணைந்து வாழ்ந்து வந்த நம் முன்னோர்கள் நோய் நொடியின்றி மிகவும் ஆரோக்கியமாக வாழ்ந்து வந்தார்கள். இதிலிருந்து விலகி சென்றதால் இன்று மனித இனம் மட்டுமல்லாமல் அனைத்து ஜீவராசிகளும் துன்பமடைந்து வருகிறது.
இயற்கையாக கிடைத்த நீர், காற்று இவையெல்லாம் விலைப் பொருளாக மாற்றப்பட்டு வருகிறது நம் மனித இனம். மரம் நடுவிழா என்று பெரிய விளம்பரமெல்லாம் செய்து ஒரு மரக்கன்றை நட்டு போட்டோ எடுத்து செய்தித்தாளில் விளம்பரம் வரும்.
ஆனால் நட்ட செடி எத்தனை? அதில் பட்டு போன செடி எத்தனை? என்பதெல்லாம் யாருக்கு தெரியப்போகிறது. சத்தமே இல்லாமல் இன்று பெரிய பெரிய சாதனைகளை செய்துக்கொண்டிருப்பவர்கள் ஏராளமாக உள்ளார்கள்.
மரம் நடுவோம் மழை பெறுவோம் என்று பள்ளியில் குழந்தைகளுக்கு பாடம் கற்றுத் தருவதுடன் நின்றுவிடாமல் மரக்கன்றுகளை நட்டு பராமரிக்கும் மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கி ஊக்குவிக்கும் செயல் பாராட்டப் பட வேண்டும். ஒரு மரம் நமக்கு என்னென்ன நன்மைகளை கண்ணுக்குத் தெரியாமலும், தெரிந்தும் செய்து வருகிறது என்பதை மாணவர்களுக்கும் மற்றவர்களுக்கும் விளக்க வேண்டும்.
சமீபத்தில் படம் ஒன்றில் மரத்தின் நிழலில் ஒதுங்கும் ஒருவருக்கு டோக்கன் கொடுப்பது போன்ற படக்காட்சியைப் பார்த்ததும் மனம் பதறுகிறது. எதிர்காலம் எப்படியாகுமோ? என்ன ஆகுமோ? என்ற கவலை மனதினுள் வந்து வந்து செல்கிறது.
ஒரு கூட்டத்தில் ஒரு பேச்சாளர் பேசிய பேச்சு இது. கிளி வளர்த்தேன் பறந்து சென்றது. அணில் வளர்த்தேன் ஓடிப்போனது. ஒரு மரம் வளர்த்தேன் இவை இரண்டும் மரத்தை நாடி வந்தது என்றார்.
எவ்வளவு அற்புதமான கருத்து. மரம் இயற்கையின் வரம். மரம் நடுவது ஏதோ ஒரு சம்பிரதாயமாகவோ, சடங்காகவோ இல்லாமல் உணர்வுபூர்வமாக மாற வேண்டும்.
சாலை ஓரத்தில் ஒருவர் குழித் தோண்டிக் கொண்டே சென்றாராம். அதை ஒருவர் மூடிக்கொண்டே வந்தாராம். வழியில் சென்ற ஒருவர் ஏன் இப்படி செய்துக் கொண்டிருக்கிறீர்கள் என்று கேட்டாராம்.
அதற்கு அந்த இருவரும் முதலாவது நபராகிய நான் குழி தோண்ட வேண்டும். இரண்டாவது நபர் குழியில் செடியை வைத்துத் துக் கொண்டே வர வேண்டும். மூன்றாவது நபர் மண்கொண்டு குழியை மூடிக் கொண்டே வர வேண்டும்.
இதில் இரண்டாவது வேலைக்கு வரவில்லை. ஆதனால் அவரவர் வேலையை நாங்கள் இருவரும் செய்து வருகிறோம் என்றாராம். வழியில் கேள்விக் கேட்டவர் மயங்காத குறையாக நின்ற போது இது கவர்மென்ட் வேலை என்றாராம்.
தாவரங்கள் அதிக அளவில் இருந்தால் பல்லுயிர் பெருக்கம் அதிகமாகும். இயற்கை உணவு சங்கிலி அறுபடாமல் இருக்கும்.
பசுமையான புல்வெளிகளும், வயல்வெளிகளும் மனதிற்கும் மற்ற உயிரினங்களுக்கும் சந்தோசத்தையும், மகிழ்ச்சியையும் கொடுக்கும். காடுகள் விரிவாக்கம் அதிகப்படுத்த வேண்டும். காட்டுயிரிகள் நாட்டுக்குள் படை எடுக்காமல் இருக்க வேண்டுமானால் காடுகள் அழிக்கப்படுவதை தடுக்க வேண்டும்.
சுற்றுச்சூழல் மிகவும் சிறப்பாக இருக்க வேண்டுமாயின் இயற்கையை பாதுகாக்கப்படுவது மிகவும் அவசியம். நீருக்கான தேவை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. ஆனால் நீர் சேமிப்பைப் பற்றி சிறிதும் அக்கறை இல்லாமல் இருக்கும் மனித குலம் எதிர்கால நீர்த் தேவையை எப்படி பூர்த்தி செய்துக் கொள்ளப் போகிறது என்ற கவலை ஒரு பக்கம் வாட்டுகிறது. இயற்கையாக இருந்த ஏரி, குளம், குட்டை, கிணறு
இவையெல்லாம் காணாமல் போனது யாராலே?
இவையெல்லாம் காணாமல் போனதற்கும்,
தூர்ந்துப் போனதற்கும் யார் தான் பொறுப்பு?
யாரை குற்றம் சொல்வது?
பணம் மட்டும் இருந்தால் போதும் எதை வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளலாம் என்ற நிலையிலான தலைமுறை உருவாகி வருகிறது. இயற்கையாக கிடைக்கும் நீரை, காற்றை எவ்வளவு நாளைக்கு வாங்க முடியும்? ஆறு, ஏரி, குளம் காக்கப்பட்டு மழைக்காலங்களில் அவைகளில் நீரை சேமித்து வைத்து நிலத்தடி நீர் மட்டம் உயர முயன்றால் நாம் பல சிக்கல்களில் இருந்து விடுபடலாம். பெரிய அளவில் நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவதை தடை செய்ய வேண்டும். நீரை சேமிக்க வாய்ப்புள்ள இடங்களில் எல்லாம் தடுப்பணைகள் கட்டி நீர் சேமிப்பை உறுதி செய்யலாம்.
இயற்கையை பாழ்படுத்தும் செயல்கள் அனைத்தும் தடை செய்ய வேண்டும். வாகைப் புகை, தொழிற்சாலைப் புகை, டயர், பிளாஸ்டிக் எரிப்பதால் உண்டாகும் கரும்புகையில் உள்ள வாயுக்கள் இயற்கைக்கும் உயிரினகளுக்கும் பாதிப்பாக உள்ளது. புவி வெப்பமயமாகி வருவதை தடுத்திட வாகன எண்ணிக்கையை குறைத்துக் கொண்டு பொது போக்குவரத்தை அந்தம் பயன்படுத்த பழக வேண்டும். ஓசோன் படலம் காக்க ஓசையில்லாமல் செய்ய வேண்டிய பணிகள் ஏராளம், ஏராளம்!
இயற்கையை அதன் போக்கிலேயே விட்டு விட வேண்டும். இயற்கையோடு இணைந்து வாழும் வாழ்க்கை முறையை வருங்காலத் தலைமுறைக்கு கற்றுக் கொடுப்பது நல்லது.
நம் முன்னோர்கள் கடைப்பிடித்து வாழ்ந்து வந்த இயற்கைக்கு திரும்பும் முயற்சி தேவை. நவீன வசதி என நாம் செய்து வரும் ஒவ்வொரு கண்டுபிடிப்புகளும் ஏதோ ஒரு விதத்தில் இயற்கைக்கு கேடு விளைவிக்கக் கூடியதாகவே உள்ளது. இயற்கையை நேசிக்கும் பக்குவத்தையும், பழக்கத்தையும் வருங்கால தலைமுறையினருக்கு உணர்த்த வேண்டியது கட்டாயம். வாருங்கள் இயற்கையை காக்க ஒன்றினைவோம்: வரலாற்றில் இடம் பிடிப்போம்!
இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக அமைந்து எனக்கு நீங்கள் நன்றி சொல்ல நினைத்தால் கீழே உள்ள subscribe buttonஐ Click செய்யவும். எனக்கு நன்றி தெரிவித்த அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றிகள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக